மகாவிஷ்ணு ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக நரசிம்மர் வடிவம் எடுத்து தூணிலிருந்து வெளிப்பட்டபோது 'அஹோ, என்ன பலம்' என்று தேவர்கள் வர்ணித்ததால் இந்த ஸ்தலத்திற்கு 'அஹோபலம்' என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர். சீதையைத் தேடி தென்திசை வந்தபோது, இராமனும், லக்ஷ்மணனும் இங்கு வந்து ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை வணங்கியபின் தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. நரசிம்மர் வேடுவராக வந்து லக்ஷ்மியைத் திருமணம் செய்ததாக புராண வரலாறு. இங்கு 9 நரசிம்மர் சந்நிதிகள் உள்ளதால் 'நவ நரசிம்மர் ஸ்தலம்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் பிரஹலாதவரதன், லக்ஷ்மி நரசிம்மன் என்னும் திருநாமங்களுடன் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் மாலோல நரசிம்ஹர். தாயார் அமிர்தவல்லி என்றும், செஞ்சு லக்ஷ்மி என்றும் வணங்கப்படுகின்றார். பகவான் அஹோபில மடத்து முதல் அழகிய சிங்கருக்கு யோகி ரூபத்தில் பிரத்யக்ஷம்.
இங்கு மலை அடிவாரத்தில் லக்ஷ்மி நரசிம்மர் சந்நிதியும், மலை ஏறும் வழியில் யோக நரசிம்மர் மற்றும் சக்ராந்த நரசிம்மர் சந்நிதிகளும், மலை மேல் ஜ்வாலா நரசிம்மர் மற்றும் வராஹ நரசிம்மர் சந்நிதிகளும், அருகில் உள்ள வேதகிரி மலை மீது பாவந நரசிம்மர் சந்நிதியும், கந்தாத்திரி மலை மீது மாலோல நரசிம்மர் சந்நிதியும், பார்கவ தீர்த்தக்கரையில் பார்கவ நரசிம்மர் மற்றும் காரஞ்ச நரசிம்மர் சந்நிதிகளும் உள்ளன.
இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட தூண் உள்ளது. அஹோபில மடத்து முதல் அழகிய சிங்கருக்கு நரசிம்மர் காட்சி தந்து, அவருக்கு ஸ்ரீசடகோப ஜீயர் என்ற நாமம் இட்டு ஒரு வைஷ்ணவ ஸ்தாபனத்தை நிறுவுமாறு அருளினார். அவர் பூஜை செய்வதற்கு ஓர் உத்சவ மூர்த்தியான மாலோல நரசிம்மரை அளித்தார். அன்று முதல் அஹோபில மடத்து ஜீயர்கள் பரம்பரை பரம்பரையாக அந்த மூர்த்தியை ஆராதித்து வருகிறார்கள்.
ஒரு சமயம் கருடன் பகவானை நோக்கித் தவம் செய்து, முன்பு செய்த நரசிம்மாவதாரத்தை மீண்டும் காண அருள வேண்டும் என்று வேண்டிப் பெற்றார். அதனால் இந்த மலை கருடாசலம், கருடாத்திரி என்று வழங்கப்படுவதாக புராண வரலாறு. பகவான் வைகுண்டத்தை விட்டு இங்கு எழுந்தருளிவிட்டபடியால் மஹாலக்ஷ்மியும் இத்தலத்தில் வேடர் (செஞ்சு) குலத்தில் பிறந்து பகவானை மணந்ததாக ஸ்தல வரலாறு கூறுகின்றது. ஆதிசங்கரரை ஒரு காபாலிகன் கொலை செய்ய முற்படும்போது நரசிம்மர் எழுந்தருளி காப்பாற்றியதாக கூறப்படுகிறது.
திருமங்கையாழ்வார் 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.
மலையடிவாரக் கோயில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். மலைக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|